கொரோனா லாக்டவுனிற்கு முன்பாக தஞ்சாவூர் வடக்குவாசல் பகுதியில் மாட்டுச்சந்தை நடந்து வந்தது. கொரோனா காலத்திற்கு பின்னர் வடக்கு வாசல் பகுதியில் மாட்டுச்சந்தை இயங்கவில்லை. இதனால் விவசாயிகள் தங்கள் மாடுகளை விற்கவும், புதிய மாடுகளை வாங்கவும் இயலாமல் தவித்து வந்தனர். இதற்காக வெளி மாவட்டங்களுக்கு செல்லும் நிலை இருந்து வந்தது. இதனால் அதிக செலவான நிலையில் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தவித்து வந்தனர். தங்களின் மாடுகளை விற்பனை செய்து விட்டு புதிதாக மாடுகள் வாங்க இயலாத நிலையில் விவசாயிகள் வருமானத்தில் இழப்பை சந்தித்து வந்தனர்.
அதன் பின்னர் தஞ்சை அருகே 8.கரம்பை பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் இடத்தில் மாடுகளை ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்த போதுமான இடமும் தேவையான வசதிகளும் இருந்ததால் அந்த இடத்தில் மாட்டுசந்தை நடத்த வசதியாக இருந்தது. இதனால் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மாட்டுச்சந்தை அந்த இடத்தில் நடந்து வந்தது. இந்த மாட்டுச்சந்தையில் நாட்டு மாடுகள், கறவை மாடுகள், உழவுப்பணிக்கான மாடுகள் என பிற மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் தங்கள் மாடுகளை கொண்டு வந்து விற்றும், புதிய மாடுகளை வாங்கியும் செல்கின்றனர். சராசரியாக வாரத்திற்கு ஒருமுறை இந்த மாட்டுச்சந்தையில் 400 முதல் 500 மாடுகள் வரை விற்பனையாகிறது. சராசரியாக ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரையில் மாடுகள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்கப்படுகிறது.
இதுகுறித்து 8.கரம்பை பகுதியை சேர்ந்த விவசாயி விஜயகுமார் கூறியதாவது: தற்போது இங்கு வாரந்தோறும் மாட்டுச் சந்தை நடந்து வருவதால் தஞ்சை பகுதியில் மாடுகள் வளர்ப்பவர்கள், விவசாயிகள் தங்கள் மாட்டை விற்பனைக்கு கொண்டு வருவது எளிதான ஒன்றாக உள்ளது. மேலும் புதிய மாடுகளையும் வாங்கி செல்கின்றனர். இன்றைய காலக்கட்டத்தில் சாகுபடி பணிகள் நடக்காத போது வெகுவாக வருமானத்திற்கு கை கொடுப்பது கால்நடைகள்தான். எனவே இந்த மாட்டுச்சந்தை எங்களுக்கு மிகுந்த பயன் அளிக்கும் ஒன்றாக உள்ளது. அருகில் உள்ள பகுதிகள் முழுவதும் கிராமங்கள்தான். அதனால் விவசாயிகள் தங்களின் மாடுகளை விற்பனை செய்ய இந்த இடம் ஏதுவான ஒன்றாக இருக்கிறது என்றார்.