இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும். 2021ல் நடத்தப்பட்டிருக்க வேண்டும். கொரோனா காரணமாக அப்போது நடத்தப்படவில்லை. தொடர்ந்து 3 வருடங்களாக தள்ளிப்போடப்பட்டு விட்டது. எனவே மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் அத்துடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என்ற கோரிக்கை இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் எழுந்துள்ளது. திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளும் இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசுக்கு பல முறை கடிதமும் எழுதி உள்ளார்.
எனவே ஒன்றிய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்புடன், ஜாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த தீவிர ஆலோசனை நடத்தி வருகிறது. மத்திய அரசின் அதிகாரிகள் வட்டாரத்தில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்காக மக்கள் தொகை கணக்கெடுப்பு படிவத்தில் இடம் ஒதுக்க உள்ளதாக கூறப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது ஜாதி பெயரையும் கேட்டு படிவத்தில் குறிப்பிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.