கேரள மாநில அரசின் ‘நவ கேரளா சதஸ் யாத்ரா’ திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் ஆழப்புலா பகுதியில் நடைபெற்ற யாத்திரையின் போது முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் இளைஞர் காங்கிரஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது முதல்வரின் பாதுகாவலர்கள் காங்கிரஸ் மீது தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின. இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில் எந்த வித வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதனைத்தொடர்ந்து இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏ.டி.தாமஸ் மற்றும் அஜய் குரியகோஸ் ஆகியோர், முதல்-மந்திரியின் பாதுகாவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து கோர்ட்டு உத்தரவின்பேரில், முதல்-மந்திரி பினராயி விஜயனின் பாதுகாவலர்கள் 2 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 294 பி, 323 மற்றும் 325 ஆகிய பிரிவுகளின் கீழ் ஆழப்புலா தெற்கு காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.