Skip to content

சர்ச்க்குள் நுழைந்த விவகாரம்.. அண்ணாமலை மீது வழக்கு..

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 8-ந்தேதி ‘என் மண், என் மக்கள்’ நடைபயணம் மேற்கொண்டார். பின்னர் பி.பள்ளிபட்டியில் உள்ள புகழ்பெற்ற புனித லூர்து அன்னை மாதா ஆலயத்திற்கு சென்றார். அப்போது அப்பகுதியை சேர்ந்த கிறிஸ்தவ வாலிபர்கள், அண்ணாமலையை ஆலயத்துக்கு வரக்கூடாது என்றும், மாதா சிலைக்கு மாலை அணிவிக்க கூடாது என்றும் கூறி தடுத்து நிறுத்தினர். அந்த பகுதியில் இருந்து வெளியேறுமாறு கோஷம் எழுப்பினர். அப்போது மணிப்பூர் கலவரம் தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர். இதனால் அங்கு அண்ணாமலைக்கும், கிறிஸ்தவ வாலிபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது மணிப்பூரில் நடந்தது இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறு என்றும், அதை நீங்கள் புரிந்து கொள்ள என்றும் அண்ணாமலை கூறினார். அனைவரும் ஆலயத்துக்கு வர உரிமை உள்ளது. மேலும் ஆலயம் உங்கள் பெயரில் உள்ளதா? என்று தடுத்து நிறுத்தியவர்களிடம் அண்ணாமலை கேள்வி எழுப்பினார். இதையடுத்து போலீசார் அங்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வாலிபர்களை அந்த பகுதியில் இருந்து வெளியேற்றினர். அதன் பின்னர் ஆலயத்துக்குள் சென்ற அண்ணாமலை மாதா சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொம்மிடி போலீசில் கார்த்திக் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாமலை மீது 3 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *