Skip to content
Home » தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

தொடர் கார் திருட்டு.. வக்கீல் உள்பட 5 பேர் கைது…

  • by Senthil

சென்னை அயனாவரம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 3 மாதங்களாக, 4 கார்கள் மற்றும் 2 குட்டி யானை எனப்படும் மினி வேன் திருடுபோனதை தொடர்ந்து கார்களை குறி வைத்து திருடும், திருட்டு கும்பலை பிடிக்க, போலீசார் திருடுபோன இடங்களில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

இதன் அடிப்படையில் பிறகு புளியந்தோப்பு சுந்தரபுரம் 2வது தெருவை சேர்ந்த தாமோதரன் (56) என்ற நபரை போலீசார் பிடித்து விசாரணை செய்தனர். அதில்,  அயனாவரம் குன்னூர் நெடுஞ்சாலையில் சாவி கடையில் தாமோதரன் வேலை செய்து வருகிறார். இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்பு, அயனாவரம் பகுதியில் பணிபுரிந்த அகஸ்டின் ஈபன் இன்பராஜ் (49) என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு, கார்களை திருடுவதற்கு சாவி தயார் செய்து கொடுக்கும் வேலையை தாமோதரன் செய்து வந்துள்ளார். அதன்படி, கார்களை நோட்டமிட்டு அந்த காருக்கு ஏற்ற சாவிகளை தயார் செய்து, தாமோதரன் மற்றும் ஆஸ்டின் ஈபன் இன்பராஜ் ஆகிய 2 பேரும் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இப்படி திருடப்பட்ட கார்களை மதுரை வாடிப்பட்டியை சேர்ந்த தனகோபால் (40), மதுரை புதூர் பகுதியை சேர்ந்த ஜெயராஜ் (58), கோவை கரும்புக்காரர் பகுதியை சேர்ந்த சாகுல் அமீது (எ) இமாம் அலி (44) ஆகிய 3 பேரிடமும் விற்று வந்துள்ளனர். இவர்கள், 3 பேரும் கார் புரோக்கர்களாக செயல்பட்டு வந்துள்ளனர். இவ்வாறு பிடிபட்ட தாமோதரன் கொடுத்த தகவலின்பேரில் அயனாவரம் குற்றப்பிரிவு போலீசார் கன்னியாகுமரி மாவட்டம் பகுதியை சேர்ந்த ஆஸ்டின் ஈபன் இன்பராஜ் மற்றும் மதுரையை சேர்ந்த தனகோபால், மதுரையை சேர்ந்த ஜெயராஜ், கோயம்புத்தூரை சேர்ந்த சாகுல் ஹமீது ஆகிய 4 பேரையும் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாகுல் ஹமீது (எ) இமாம் அலி மீது 1998ம் ஆண்டு கோயம்புத்தூரில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கு உள்ளது. மதுரையில் கைது செய்யப்பட்ட தனகோபால் என்பவர் மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. அகஸ்டின் ஈபன் இன்பராஜ் மீது அரும்பாக்கம், நாகர்கோவில், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!