Skip to content
Home » கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கார் கண்ணாடியை உடைத்து 30 லட்சம் திருட்டு போன சம்பவத்தில் குற்றவாளி கைது….

கடந்த 14ஆம் தேதி இரவு அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலுக்கு பச்சாபாளையம் பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தி உணவருந்த சென்றுள்ளார். அப்போது அவர் அவரது காரில் 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்து விட்டு உணவருந்தி விட்டு திரும்பி வந்து பார்க்கும் பொழுது கார் கண்ணாடி உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 30 லட்சம் ரூபாய் பணம் திருடு போயிருந்தது. இது குறித்து அவர் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் புகார் அளித்ததை தொடர்ந்து மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் உதவி ஆணையர் பார்த்திபன் தலைமையில், காவல் ஆய்வாளர்கள் கணேஷ்குமார், மரியமுத்து, வினோத்குமார், செந்தில்குமார், 15 ஆய்வாளர்கள் அடங்கிய 4 தனிப்படைகள் விசாரணை மேற்கொண்டது. அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகள் உட்பட பல்வேறு தகவலின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுப்பட்ட ராஜேஷ்குமார்(33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த இவர் தற்போது கோவையில் வசித்து வருகிறார். இவரிடமிருந்து 24 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்ட நிலையில் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய காரும் கைப்பற்றப்பட்டது.

இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு பீளமேடு காவல் நிலையத்தில் நடைபெற்றது, இதில் செய்தியாளர்களை சந்தித்த உதவி ஆணையர் பார்த்திபன், ஈஸ்வரமூர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டதில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் அவரிடமிருந்து 24 லட்சம் ரூபாய் மற்றும் கார் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொள்ளையடித்த 30 லட்சத்தில் ஆறு லட்சம் ரூபாய்க்கு இதர பொருட்களை வாங்கி விட்டதாக தெரிவித்த நிலையில் அப்பொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கூறினார். 24 மணி நேரத்தில் சுமார் 400 லிருந்து 500 சிசிடிவி கேமராக்கள் ஆய்வு செய்யப்பட்டது எனவும், ஈஸ்வரமூர்த்தி நிறுத்தி இருந்த கார் மறைவான பகுதியில் நிறுத்தப்பட்டிருந்ததால் எளிதாக பணம் திருடப்பட்டுள்ளது எனவும் காரில் வந்து ராஜேஷ்குமார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். ராஜேஷ்குமார் ஓட்டுநராக பணியாற்றி வருகிறார் எனவும் அவருடைய சொந்த காரில் வந்து இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் அவர் மீது வேறு எந்த வழக்கும் இல்லை எனவும் எளிதாக பணம் சம்பாதிக்கும் நோக்கில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் எனவும் தெரிவித்தார். திருடிய 30 லட்சத்தில் ஆறு லட்சம் ரூபாயில் சிறிது பணத்தை அவரது மனைவியின் வங்கி கணக்கில் செலுத்தி விட்டு, காருக்கு டயர் மாற்றி உள்ளதாகவும் நாள்தோறும் சுவையான உணவுகளை உண்டு வந்ததாகவும் தெரிவித்த உதவி ஆணையர் வாங்கிய பொருட்களைக் கொண்டு பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் வணிக வளாகங்கள், கடைகளுக்கு செல்வோர் பணத்தை காரில் வைத்து விட வேண்டாம் எனவும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் பீளமேடு காவல் நிலைய சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் கணேஷ்குமார், குற்றப்புலனாய்வு ஆய்வாளர் மரியமுத்து, சிங்காநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் வினோத்குமார், சரவணம்பட்டி ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!