சட்டவிரோத கல் குவாரிகள் குறித்து சுவரொட்டி ஒட்டியதால் தன் மீது கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்த சம்பவம் குறித்து முறையாக விசாரணை நடத்த கோரி லோக் ஜனசக்தி மாவட்ட தலைவர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.
கரூர் மாவட்டம், க. பரமத்தி அருகே உள்ள காந்திநகர் பகுதியை சேர்ந்த ஆறுமுகத்தை கல்குவாரி உரிமையாளர்கள் கொலை செய்ய முயற்சிப்பதாக கூறி இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த புகார் மனுவில், லோக் ஜனசக்தி கட்சியில் மாவட்ட தலைவராக உள்ளேன் கடந்த 21.07.24 அன்று இருசக்கர வாகனத்தில் கரூரில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத 3 கார்கள் பின்தொடர்ந்து வந்து தன் மீது மோதியதில் கண் மற்றும் இரண்டு கால்களில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், இதுகுறித்து காவல்துறையிடம் கூறியதற்கு, புகாரை மாற்றி எழுதிக் விட்டதாக கூறப்படுகிறது.
மேலும், க.பரமத்தி பகுதியில் கிஸ்கால் ப்ளூ மெட்டல் மற்றும் பாலவிநாயகா ஆகிய கல்குவாரிகள் மீது சட்டத்திற்கு எதிரான தொடர் சட்டவிரோத செயல்கள் மற்றும் விதிமீறல்கள் நடப்பதாக கூறி அரசுக்கு புகார் அளித்துள்ளதாகவும், தலித் விடுதலை இயக்கம், சமநீதி கழகம் மற்றும் லோக் ஜனசக்தி கட்சி ஆகிய அமைப்புகள் இணைந்து அப்பகுதியில் கண்டன சுவரொட்டிகளை ஒட்டி இருந்ததாகவும், அந்த சுவரொட்டிகள் அனைத்தும் குவாரி பணியாளர்கள் மூலம் கிழித்ததோடு, தன்னைப் பற்றி பல்வேறு இடங்களில் விசாரித்ததாக கூறியுள்ளார்.
மேலும், இரண்டு கல்குவாரி பணியாளர்களின் தூண்டுதலால்தான் தன்னை கார் ஏற்றி கொலை செய்ய முயற்சித்ததாக சந்தேகப்படுவதாகவும், எனவே இந்த சம்பவத்தை முறையாக விசாரணை நடத்தி உண்மை குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்து தனக்கும், குடும்பத்தினருக்கும் உயிர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.