தென்னிந்தியாவின் அயோத்தி என்றழைக்கப்படும் கும்பகோணம் ராமசுவாமி கோயிலில் ஆண்டு தோறும் ராமநவமி விழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ராமநவமி விழா கொடியேற்றம் கடந்த 22ம் தேதி நடந்தது.
அதைத் தொடர்ந்து தினமும், பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. ஸ்ரீ ராமநவமியான இன்று அதிகாலை 4.15 மணிக்கு மேல் 5.15 மணிக்குள் சுவாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை 8 மணிக்கு திருத்தேரோட்டம் நடைபெற்றது. தேரில் சீதா ,ராமர் ,லெட்சுமணர் சிறப்பலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தனர். ராமா ராமா என முழக்கமிட்டபடி ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
இரவு 8 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. நாளை காலை திருமஞ்சனமும், மாலை புஷ்பகயாகம், த்வாதச ஆராதனை, இரவு சப்தாவர்ணமும், நாளை மறுநாள் காலை ராஜ உபசார திருமஞ்சனமும், ஸ்ரீ ராமபிரானும், சீதையும் திருக்கல்யாண சேவையில் புஷ்பக விமானத்தில் வீதியுலா புறப்பாடும் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளைக் கோயில் செயல் அலுவலர் சி.மகேந்திரன் மற்றும் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.