தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள அலமேலுபுரம்பூண்டியில் வீரமாமுனிவர் கட்டிய மாதா கோயில் பசிலிக்கா எனப்படும் பூண்டிமாதா பேராலயமாக, வானுயர்ந்த கோபுரங்களுடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இங்கு ஆண்டு தோறும் புனித அன்னை மரியாளின் பிறப்பு பெருவிழா ஆகஸ்ட் 30 முதல் செப்டம்பர் 9 வரை நடைபெறும். இந்த ஆண்டு விழா ஆகஸ்ட் 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நவநாட்கள் திருப்பலி பூசைகளை பங்குகுருமார்கள் செய்தனர். ஞாயிற்றுக்கிழமை(செப்.8) மாலை 6மணிக்கு சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.ராயப்பன் அன்னையின் பிறப்புப் பெருவிழா திருப்பலி நிறைவேற்றிஅருளாசியும் வழங்கினார்.
இரவு விழாவின் சிறப்பு அம்சமான மல்லிகை மலர்களாலும், ஒளிவிளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்ட “பூண்டி மாதாவின் ஆடம்பர தேர் பவனியை” கேபிஎஸ் பாண்ட் இசைக்குழு இன்னிசையுடன் சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.ராயப்பன் புனிதப்படுத்தி துவக்கி வைத்தார்.
இதில் மைக்கேல்பட்டி மறை வட்ட முதன்மை குரு எஸ்.இன்னசென்ட், பூண்டிமாதா பேராலய அதிபரும் பங்குத் தந்தையுமான பி.ஜெ.சாம்சன், துணை அதிபர் ஜெ.ரூபன்அந்தோனிராஜ், பூண்டி மாதா தியான மைய இயக்குநர் எஸ்.ஆல்பர்ட்சேவியர், உதவித்தந்தைகள் ஜான்கொர்னேலியுஸ், செபாஸ்டின், ஆன்மீகத்தந்தைகள் ஏ.அருளானந்தம், பி.ஜோசப், சுற்றுவட்ட பங்கு தந்தையர்கள் மற்றும் ஏராளமான பங்குமக்கள் கலந்து கொண்டனர்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை திருக்காட்டுப்பள்ளி போலீஸார் செய்திருந்தனர்.விழாவை முன்னிட்டு கோயில் வளாகம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாணவேடிக்கை நடந்தது.
இன்று (செப்.9) காலை 6மணிக்கு திருவிழா கூட்டுதிருப்பலியை சேலம் மறைமாவட்ட மேதகு ஆயர் ஏ.ராயப்பன்தலைமையில்குருமார்கள் நிறைவேற்றினர். அதைத்தொடர்ந்து விழா நிறைவு பெற்றது.