திருச்சி, அரியமங்கலம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் அபுபக்கர் (45) . கார் ஓட்டுநராக பணியாற்றி வந்த இவருக்கு சித்திகா என்ற மனைவியும் இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். சித்திகா கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு பக்ரைன் நாட்டுக்கு வேலைக்கு சென்றுவிட்டதால், இரண்டு பெண் குழந்தைகளும் சித்திகாவின் சகோதரி வீட்டில் வளர்ந்து வருகின்றனர். அபுபக்கர் மட்டும் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் இரு நாள்களாக அவரது நடமாட்டம் இல்லை எனக் கூறப்படுகிறது. நேற்று பிற்பகலில் அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதியினர் அரியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
அதன் பேரில் போலீசார் நிகழ்விடம் சென்று பார்த்தபோது, வீட்டில் அபுபக்கர் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவரது உடலருகே பாதி அருந்திய நிலையில் மது பாட்டில் ஒன்றும், அதேபோல் பாதி உட்கொண்ட நிலையில் மீதி உணவும் இருந்துள்ளது. மேலும் ஆடைகளற்ற நிலையில் அவர் இறந்து கிடந்துள்ளார். இதனையடுத்து அபுபக்கரின் உடலை கைப்பற்றிய பிரேத பறிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் யாருமில்லாததால் அவர் ரிலாக்ஸாக இருந்த நிலையில், நெஞ்சு வலியேற்பட்டு உயிரிழந்தாரா ? அல்லது வேறு காரணங்களால் அவர் உயிரிழந்தாரா என்ற கோணங்களில் போலீசார் சந்தேக மரண வழக்காக பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.