மத்தியப் பிரதேச மாநிலம், சியோனி மாவட்டத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் சியோனி – மண்ட்லா மாநில நெடுஞ்சாலையில் தனகதா கிராமத்தில் இன்று அதிகாலை 1 மணிக்கு கார் – பஸ் மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் வந்த 5 பேரில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 2பேர் படுகாயம் அடைந்தனர்.
இந்த விபத்தில் பஸ் கவிழ்ந்ததில் எஸ்ஏஎப் வீரர்கள் 26 பேர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த சியோனி மாவட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இதேபோல், மாநில காவல்துறையின் 35வது பட்டாலியனைச் சேர்ந்த எஸ்ஏஎப் வீரர்கள், மாண்ட்லாவிலிருந்து பந்துர்னாவுக்கு (சிந்த்வாரா) பஸ்சில் சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் படுகாயமடைந்த 26 பேரில் கவலைக்கிடமாக உள்ள ஒருவர் நாக்பூர் ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து கியோலாரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.