குமரி மாவட்டம், நாகர்கோவில் கோட்டார் இளங்கடை பகுதியைச் சேர்ந்தவர் காதர் (44). இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று நெல்லையில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் திரைப்படம் பார்க்க சென்றுள்ளனர். அதனைத் தொடர்ந்து இரவு 11 மணி அளவில் நெல்லையிலிருந்து நாகர்கோவில் நோக்கி காரில் வந்துள்ளனர். காரை அவரது மகன் அப்துல்லாகான் ஓட்டி வந்தார்.
இந்நிலையில் நாங்குநேரி அருகே உள்ள நம்பி நகர் தேசிய நெடுஞ்சாலையில் வரும்போது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டது. இதில் காதர் மனைவி பவினா மகன் அப்துல்லாகான், மகள் அப்ரா உள்ளிட்ட நான்கு பேரும் படுகாயம் அடைந்தனர். இதனை அடுத்து ஆம்புலன்ஸ் மூலம் 4 பேரும் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர் . அங்கு பவினா சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து நாங்குநேரி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கார் கவிழ்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.