மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா வைத்தீஸ்வரன் கோவில் வேலவன் நகரை சேர்ந்த கணேஷ் மகன் ராகுல். இவர் கோயம்புத்தூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் (ஶ்ரீகிருஷ்ணா) கல்லூரியில் சைபர் செக்யூரிட்டி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அதே கல்லூரியில் படிக்கும் இவரது நண்பர்கள் கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் ஹரி ரோஹித் (18) நாமக்கலைச் சேர்ந்த வித்தின்(18) சென்னை சேர்ந்த யுனேஷ்(19) ஆகியோர் ஆயுத பூஜையை விடுமுறை தினத்தில் ரோகித் வீட்டிற்கு வந்துள்ளனர். இந்நிலையில் இன்று எர்டிகா காரில் கல்லூரி மாணவர்கள் நான்கு பேர் மற்றும் ராகுல் நண்பர்கள் நித்திஷ்குமார். நித்திஸ். ஆகாஷ்பாலாஜி, தருண் ஆகிய 8பேர் தரங்கம்பாடி கடற்கரைக்கு சென்று விட்டு மீண்டும் வைத்தீஸ்வரன்கோவிலுக்கு திரும்பி உள்ளனர். காரை ரோகித் ஓட்டி வந்துள்ளார்.
ஆக்கூர் அருகே பூந்தாலை கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் லேசான வளைவில் கார் சென்றபோது எதிரே வந்த காரில் மோதாமல் இருப்பதற்காக இடது பக்கம் காரை திருப்பியபோது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்து உருண்டு விபத்’து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் அடிபட்ட இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் மேட்டுப்பாளையத்தை சேர்ந்த ஹரி ரோஹித் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற ஏழு பேர் காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர். உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த 7 பேர் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். செம்பனார்கோவில் போலீசார் ஹரி ரோஹித் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயம்புத்தூரில் இருந்து வந்த இன்ஜினியரிங் கல்லூரி மாணவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.