நடிகரும், தேமுதிக நிறுவன தலைவருமான விஜயகாந்த் கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி, உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். லட்சக்கணக்கான ரசிகர்கள், தொண்டர்கள் முன்னிலையில் அவரது உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அவரை கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய உத்தரவிட்டது. மேலும், முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து இறுதி அஞ்சலியில் கலந்துகொண்டார்.

இந்நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் திரைப்பட நட்சத்திரங்கள் முதல், சாமானிய மக்கள் வரை அன்றாடம் சென்று பலர் அஞ்சலி செலுத்தி வருகிறனர். சிலர், அன்னதானம் வழங்கி, கேப்டனை நினைவு கூர்ந்து வருகின்றனர். இந்நிலையில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், மறைந்த நடிகர் விஜயகாந்த் நினைவிடத்திற்கு அன்னதானம் வழங்குவதற்காக சென்றார்.
அப்போது அங்கு வந்த சாமியார் ஒருவர், காசி விஸ்வநாதர் தன் கனவில் தோன்றி, விஜயகாந்த் சமாதிக்கு சென்று சங்கு ஊதும்படி கூறியதாகவும், அதனாலேயே இங்கு வந்ததாகவும் கூறினார்.

மேலும், கேப்டன் எங்கும் போகவில்லை உங்கள் மூத்தமகன் உருவில் உங்களுடன் இருக்கிறார் என கூறினார். பின்னர் திடீரென அருள் வந்தது போல் கேப்டன் குரலில் பேசிய அவர், என்னை பத்தி தெரியுமில்ல? இந்த ஏழை எளிய மக்களை விட்டுட்டு நான் எங்க போகப்போறேன் என கூறினார். பிரேமா உன் இருதயத்தில்தான் நான் குடியிருக்கிறேன் என கூறினார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.