கேப்டன் , புரட்சி கலைஞர் என்று தொண்டர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர் விஜயகாந்த், நடிகராக இருந்த காலத்திலேயே இவர் ரசிர்களுக்கு உதவிகள் செய்து, சின்ன எம்.ஜி.ஆர். , கருப்பு எம்.ஜி.ஆர் என ரசிகர்களால் பாராட்டப்பட்டார். சினிமாவுக்கு வந்த பிறகும் துணை நடிகர்களுக்கும் சம அந்தஸ்து கொடுக்கும் வழக்கத்தை உருவாக்கியவர். இன்று தனது 71 வயதில் தொண்டர்களை கண்ணீர்கடலில் ஆழ்த்திவிட்டிருக்கிறார். நுரையீரல் அழற்சி மற்றும் நிமோனியா காரணமாக விஜயகாந்த் உயிரிழந்ததாக மியாட் மருத்துவமனை அறிக்கை தெரிவித்து உள்ளது.
71 வயதில் இயற்கை நம்மை பறித்து விட்டு விஜயகாந்தின் வாழ்க்கை வரலாற்றை பார்ப்போம்.
மதுரையில் தந்தையின் அரிசி ஆலையை கவனித்து வந்த இளைஞர் விஜயராஜ், சினிமா மோகத்தில் 75 ம் ஆண்டு வாக்கில் சென்னை வந்தார். கடின உழைப்பு, தளராத மன உறுதியும் அவரை திரையில் மின்ன வைத்தது. 1978ல் அவரது முதல் படம் வெளியானது. சினிமாவுக்காக விஜயராஜ்- விஜயகாந்த் ஆனார். ஆரம்பத்தில் அவரது நிறத்தை காரணம் சொல்லி, பிரபலமாக இருந்த கதாநாயகிகள் அவருடன் நடிக்க மறுத்தனர்.
பல வெற்றிப்படங்களை கொடுத்து தனக்கென ஒரு இடத்தை நிலைநிறுத்தியபின் எந்த நடிகைள் தலைதெறிக்க ஓடினார்களோ அவர்களே ஓடிவந்தனர் விஜயகாந்தை தேடி. இப்படியாக இதுவரை 156 படங்களை நடித்தார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராகவும் உயர்ந்தார். அதே நேரத்தில் தனது ரசிகர் மன்றத்தையும் பெரிய அளவில் வளர்த்தார். இதற்காக தனது சொந்த பணத்தை செலவு செய்தார்.
75 படங்களுக்கு பின்னர் விஜயகாந்த், தனது படத்தில் கவனம் செலுத்தினார். குறிப்பாக அனல் தெறிக்கும் வசனங்கள் இடம் பெற்றது. தீவிரவாதிகளை ஒழிப்பது, லஞ்சம், லாவண்யங்களுக்கு எதிராக போர்க்குரலை எழுப்புவது என தனக்கென ஒரு தனி இடத்தை தேர்வு செய்தார். அவரது 100வது திரைப்படம் அவருடைய வாழ்க்கையில் முக்கியமானது. கேப்டன் பிரபாகரன் தான் அந்தப்படம். இதில் உள்ள கேப்டன் தான் அவருக்கு அடைமொழியானது. அவரை கேப்டன் என்றே ரசிகர்களும், கட்சி நிர்வாகிகளும் அழைத்தனர். அதைத்தொடர்ந்து தனது ரசிகர் மன்றத்தின் கொடியை திரைப்படங்களில் காட்டினார். இப்படியாக அரசியலின் நுழைவு வாயிலாக திரைப்படத்தை பயன்படுத்தினார்.
1993ல் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை உள்ளாட்சித் தேர்தலில் களம் இறக்கி ஆழம் பார்த்தார். . அதில் ஆங்காங்கே வெற்றியும் கிடைத்தது.அவரது இந்த செயல் எம்ஜிஆரின் ஆரம்பகட்ட கால அரசியல் பிரவேசத்தை நினைவுபடுத்தியது. விஜயகாந்த் எதிர்காலத்தில் என்னமோ செய்யப்போகிறார் என நினைத்த அரசியல் தலைவா்களுக்கும், சினிமாத்துறையினருக்கும் அவர் பகிரங்கமாகவே அறிவித்தார். புதிய கட்சி தொடங்கப்போவதை.
14.9.2005ல் தான் வளர்ந்த மாநகரம் மதுரையில் தனது அரசியல் கட்சியை தொடங்கினார். அதற்கு பெயர் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என பெயர் சூட்டினார். கட்சியின் நிறுவன தலைவராக தன்னை அறிவித்தார். கட்சித்தொடங்கி ஒரு வருடம் நிறைவடையாத நிலையில் 2006 சட்டமன்ற தேர்தல் வந்தது. அதில் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் வெற்றி பெற்றார். இதனால் அவரது செல்வாக்கு உயர்ந்தது. தொண்டர்களும் தேமுதிகவை நோக்கி வரத் தொடங்கினர்.
5 வருடம் சட்டமன்ற உறுப்பினராக இருந்த விஜயகாந்த் 2011ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் சக்தியாக உயர்ந்தார். எனவே தான் திமுகவும், அதிமுகவும் விஜயகாந்த்துக்கு வலை வீசியது. பண்ருட்டி ராமச்சந்திரன் மூலம் விஜயகாந்த் அதிமுக கூட்டணியில் இணைந்தார். இந்த கூட்டணியால் இரு கட்சிகளும் பயன் அடைந்தது என்பது தான் உண்மை. அதிமுக ஆட்சியை பிடித்தது. தேமுதிக 29 சீட்டுகளை பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியானது. விஜயகாந்த் எதிர்க்கட்சித்தலைவர்கள் பட்டியலில் தன்னை இணைத்துக்கொண்டார்.
பின்னர் சட்டமன்றத்திலேயே அதிமுக, தேமுதிக இடையே மோதல் ஏற்பட்டது. முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிராக சட்டமன்றத்தில் நேருக்கு நேராக ஆவேசமாக பேசியவர் விஜயகாந்த் தான். விஜயகாந்தின் இந்த கோபாவேசத்தை பொறுக்க முடியாத ஜெயலலிதா அந்த கட்சியை உடைக்க போட்ட திட்டம் தான் தேமுதிக எம்.எல்.ஏக்கள் தங்கள் தொகுதி பிரச்னைக்காக முதல்வரை சந்திப்பது என்ற சடங்கு.
இப்படி முதல்வரை சந்தித்தவர்கள் பின்னர் அதிமுக விசுவாசிகளாகவும், அதிமுகவினராகவும் மாறிவிட்டனர். இப்படியாக அந்த கட்சிக்கு இறங்குமுகத்தை ஏற்படுத்தினர். ஆனாலும் விஜயகாந்த் 2016ல் தனது தலைமையில் ஒரு 3வது அணியை உருவாக்கினார். தன்னை முதல்வர் வேட்பாளராக நிறுத்தினார். ஆனால் வெற்றி கிட்டவில்லை. தேமுதிகவால் தேர்வு செய்யப்பட்டவர்கள் செய்த துரோகத்தால் விஜயகாந்த் உடல் நலம், மன நலம் பாதிக்கப்பட்டதாக சமீபத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்திருந்தார்.
விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் தீவிர அரசியலில் இறங்க முடியவில்லை. வெளிநாடுகளுக்கெல்லாம் சென்று சிகிச்சை பெற்றாா். ஆனாலும் அவருக்கு தைராய்டு, நீரிழிவு, , நுரையீரல் பிரச்னை என பல பிரச்னைகள். இதனால் தான் அவரால் பழைய கேப்டனாக செயல்படமுடியவில்லை. இந்த நேரத்தில் தான் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா கட்சியில் தீவிரமாக களப்பணியாற்றினார்.
கடந்த 14ம் தேதி நடந்த பொதுக்குழுவில் பிரேமலதா பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். விஜயகாந்த் பூர்வீகமாக விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள ராமானுஜபுரம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். அங்கு தான் அவர் பிறந்தார். பின்னாளில் தொழிலுக்காக மதுரைக்கு அவரது பெற்றோர் இடம் பெயர்ந்தனர். விஜயகாந்த் 25.8.1952ல் பிறந்தார். தந்தை பெயர் அழகர்சாமி, விஜயகாந்த் 1990ல் திருமணம் செய்தார். இவருக்கு விஜயபிரபாகரன், சண்முகபாண்டியன் என்ற இரு மகன்கள் உள்ளனர்.