நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை 4 கட்ட தேர்தல்கள் நிறைவு பெற்றுள்ளன. வரும் 20, 25, ஜூன் 1 ஆகிய தேதிகளில் அடுத்த 3 கட்ட தேர்தல்கள் நடைபெற உள்ளன.
இதில் 6-ம் கட்டமாக மே 25-ம் தேதி பிஹாரில் 8, டெல்லியில் 7, ஹரியானாவில் 10, ஜார்க்கண்டில் 4, ஒடிசாவில் 6, உத்தர பிரதேசத்தில் 14, மேற்குவங்கத்தில் 8 என மொத்தம் 57 மக்களவைத் தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த தொகுதிகளில் 869 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
கட்சி வாரியாக பாஜக 28, காங்கிரஸ் 25, சமாஜ்வாதி 9, பிஜு ஜனதா தளம் 6, ஆம் ஆத்மி5, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, திரிணாமூல் காங்கிரஸ் 4 வேட்பாளர்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மொத்த வேட்பாளர்களில் 120 பேரிடம் ரூ.5 கோடிக்கும் அதிகமான சொத்துகள் உள்ளன. கட்சி வாரியாக பாஜக 48, காங்கிரஸ் 20, சமாஜ்வாதி 11, திரிணமூல் காங்கிரஸ் 7, பிஜு ஜனதா தளம் 6, ராஷ்டிரிய ஜனதா தளம் 4, ஐக்கிய ஜனதா தளம் 4, ஆம் ஆத்மி 4 பேர் கோடீஸ்வர வேட்பாளர்களாக உள்ளனர்.
ஹரியானாவின் குருஷேத்ரா மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நவீன் ஜிண்டாலிடம் மிக அதிகபட்சமாக ரூ.1,241 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன. இதற்கு அடுத்து ஒடிசாவின் கட்டாக் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பிஜு ஜனதா தள வேட்பாளர் சந்த்ரப் மிஸ்ராவிடம் ரூ.482 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளன.