தமிழ்நாடு,புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்கிறது.இதற்காக கடந்த 20-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. 27-ந்தேதி மாலை 3 மணியுடன் வேட்புமனு தாக்கல் முடிந்தது. தமிழகத்தில் மொத்தம் 1,749 பேர் வேட்புமனு அளித்து இருந்தனர். இந்த நிலையில், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. இறுதியில், தமிழகத்தில் 39 தொகுதிகளில் போட்டியிட 1,085 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டது. 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதேபோல், புதுச்சேரியில் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
வேட்புமனுக்களை திரும்பப்பெற இன்று (சனிக்கிழமை) கடைசி நாளாகும். மாலை 5 மணி வரை தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுக்களை திரும்பப்பெறலாம். அதன்பின்னர், வேட்பாளர்கள் இறுதிப்பட்டியல் வெளியிடப்படும். அப்போதுதான், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எத்தனை பேர் இறுதியாக களத்தில் உள்ளனர் ? என்ற இறுதி விவரம் தெரியவரும். தொடர்ந்து சின்னம் ஒதுக்கும் பணி நடைபெறும்.