விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலில் பாமக சார்பில் போட்டியிடும் சி.அன்புமணி (60), கடந்த 15 நாட்களுக்கும் மேலாக தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இதேபோல, நேற்று முன்தினம் காலை முதல் மாலை வரை, தனது சொந்த கிராமமான பனையபுரத்தில், வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, அவரை குடும்பத்தினர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அன்புமணி அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் நலம் பெற்று வீடு திரும்பினார். இன்று அவர் தனது சொந்த ஊரான பனையபுரத்தில் வாக்களித்தார். அதைத்தொடர்ந்து அவர் பல்வேறு வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குப்பதிவு நிலவரங்களை பார்வையிட்டார். பின்னர் அன்புமணி கூறியதாவது:
20 பூத்களுக்கு சென்று வாக்குப்பதிவு நிலவரத்தை பார்வையிட்டேன். வாக்குப்பதிவு எழுச்சியுடன் உள்ளது. எந்த பிரச்னையும் இல்லை. எனக்கு சாதகமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.