பட்டப்படிப்பு முடித்த மாற்றுத்திறனாளிக்கு நடிகர் பாலா பைக் வாங்கிக் கொடுத்து உதவியிருக்கிறார். அதைப்பெற்றுக் கொண்ட அந்த நண்பர், கண்கலங்கி பாலாவுக்கு நன்றி தெரிவித்து இருக்கிறார். பாலாவின் இந்தச் செயல் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைக் குவித்து வருகிறது.

இயலாதவர்களுக்கு தன்னுடைய சொந்தச் செலவில் அவ்வப்போது உதவிக்கரம் நீட்டும் நடிகர் பாலாவின் செயல்பாடுகள் மக்கள் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. சமீபத்தில், ஆம்புலன்ஸ் வசதி இல்லாத சில கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தது, சில குழந்தைகளின் பள்ளிப் படிப்பிற்கான நிதியை ஏற்பாடு செய்து கொடுத்தது, மிக்ஜாம் புயலின் போது களத்தில் இறங்கி பலருக்கும் உதவி செய்தது போன்ற விஷயங்களால் பலரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் பாலா. இதுமட்டுமல்லாது, மருத்துவ உதவிக்காக இலவச ஆட்டோ சேவையும் துவங்கினார் பாலா.
இந்த வரிசையில் தற்போது, எம்சிஏ பட்டதாரி மாற்றுத்திறனாளி ஒருவருக்கு பைக் வாங்கி கொடுத்துள்ளார் பாலா. இவ்வளவு படித்தும் அவரிடம் பைக் இல்லாத காரணத்தால் அவரால் வேலைக்கு செல்ல முடியாமல் இருந்துள்ளார். அதனால், தன்னால் முடிந்த உதவியை செய்திருப்பதாகவும் பாலா தெரிவித்தார்.
அந்த மாற்றுத்திறனாளி நண்பரின் வீட்டுக்கே போய் பைக்கை வழங்கிவிட்டு வந்திருக்கிறார் பாலா. இதை சற்றும் எதிர்பாராத அந்த மாற்றுத்திறனாளி நெகிழ்ந்து போய் பாலாவுக்கு நன்றி கூறியிருக்கிறார். பாலாவை சின்னத்திரை வட்டாரத்தினரும் அவரது நண்பர்களும் பாராட்டி வருகின்றனர்.