மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம் கீழ்கண்ட இடங்களில் காலை 10 மணிமுதல் 1 மணிவரை நடைபெறுகிறது.
அதன்படி வரும் 5ம் தேதி கும்பகோணம் ராஜ் மஹாலிலும், 12ம் தேதி தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திலும், 26 ஆம் தேதி பட்டுக்கோட்டை வட்டார சேவை மையத்திலும் நடைபெற உள்ளது. இம்முகாமில் எலும்பு முறிவு மருத்துவர், காது மூக்கு தொண்டை பிரிவு மருத்துவர், மன நல மருத்துவர் மற்றும் கண் மருத்துவர் ஆகிய அரசு மருத்துவர்கள் கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளை பரிசோதனை செய்து மருத்துவச்சான்று வழங்க உள்ளார்கள்.
மேற்படி மருத்துவ அலுவலர் வழங்கும் சான்றிதழின் அடிப்படையில் மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் இது நாள் வரை அடையாள அட்டை பெறாத மாற்றுத்திறனாளிகள் மட்டும் குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் 6 புகைப்படத்துடன் இதற்கு முன் சிகிச்சை பெற்ற ஆவணங்களுடன் வந்து கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இதுநாள்வரை தனித்துவம் வாய்ந்த அடையாள அட்டைக்கு(UDID) விண்ணப்பிக்காத மாற்றுத்திறனாளிகள் மேற்படி முகாமில் மேற்கூறிய ஆவணங்களுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகலுடன் வந்து விண்ணப்பித்து பயன் பெற கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.