உத்தரபிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தை சேர்ந்த 28 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடந்த 2 ஆண்டுகளாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இவரது கணவர் செங்கல் சூளை ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 8-ந்தேதி தொழிலாளி வெளியூர் வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் மாற்றுத்திறனாளி பெண் மட்டும் தனியாக இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முகமது முன்தியாஸ் (30) என்ற தொழிலாளி வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து மாற்றுத்திறனாளி பெண்ணை கட்டிலில் கட்டி போட்டு கற்பழித்துள்ளார். மேலும், அந்த பெண்ணை கொடூரமாக தாக்கிவிட்டு ஓடிவிட்டார்.
சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் ஆஸ்பத்திரிக்கு வந்து மனைவியை பார்த்து கதறினார். அப்போது தனக்கு நேர்ந்த கொடுமை பற்றியும், முகமது முன்தியாஸ் தன்னை தாக்கி பலாத்காரம் செய்தது குறித்தும் அந்த பெண் தனது கணவரிடம் கூறி அழுதார். அவர் இதுகுறித்து போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் முகமது முன்தியாஸ் மீது கற்பழிப்பு உள்ளிட்ட 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மாற்றுத்திறனாளி பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.