அரியலூர் மாவட்டம், அரியலூர் பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின் சார்பில் தெருமுனை விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரத்தினை மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி இன்று துவக்கி வைத்தார். சமூக பாதுகாப்புத் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனாளிகள் நல வாரியம் மூலம் உதவித்தொகை வழங்கும் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான நடமாடும் சிகிச்சைப் பிரிவு வாகனம் மூலம் பிறந்த குழந்தை முதல் 6 வயதிற்குட்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இல்லம் தேடி பயிற்சி வழங்கும் திட்டம். மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தெருமுனை
விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி பிரச்சாரம் இன்று மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியில் மேற்கண்ட திட்டங்களில் பயன்பெறும் முறைகள் குறித்தும், சேர்க்க வேண்டிய ஆவணங்கள் குறித்தும் எடுத்துக் கூறப்பட்டது. பின்னர், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்காக வழங்கும் நலத்திட்ட உதவிகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுவாமிநாதன், வருவாய் கோட்டாட்சியர் இராமகிருஷ்ணன், வட்டாட்சியர் கண்ணன், அரசு அலுவலர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.