கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் சமூக பாதுகாப்பு திட்டம் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 18 வயதிற்கு குறைவாக உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்காக நடைபெற்ற வயது வரம்பு தளர்த்தும், மருத்துவ மதிப்பீடு முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரபு சங்கர் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
இந்த முகாமில் 18 வயதிற்கும் குறைவாக உள்ள கை, கால் பாதிப்பு, பொது மருத்துவ பிரிவு பாதிப்பு, நரம்பியல் பாதிப்பு, மனநல பாதிப்பு, வாய் பேசாத, காது கேளாத பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு மாற்றுத்திறன் கொண்டவர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவர், பொது மருத்துவர், நரம்பியல் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை மருத்துவர், மனநல மருத்துவர் மற்றும் குழந்தைகள் நல மருத்துவர் என சிறப்பு மருத்துவக் குழுவினர் மூலம் மருத்துவ மதிப்பீடு முகாம் நடைபெற்றது. இந்த மருத்துவ மதிப்பீடு முகாமில் பரிந்துரைக்கப்படும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவரின் உத்தரவுபடி மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ மதிப்பீடு முகாமில் பல்வேறு மாற்றுத்திறன் கொண்ட 25 குழந்தைகள் கலந்து கொண்டார்கள்.