கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் ₹30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டோமோதெரபி ரேடிஸாக்ட் X9 அதிநவீன கதிரியக்க சிகிச்சை கருவி புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இன்று அக்கருவியை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது:
கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முகாம்கள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். ஈரோடு, திருப்பத்தூர் ராணிப்பேட்டை, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில், 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை செய்ய தொடங்கி இருப்பதாகவும் இதுவரை 109 பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் கூறினார். தமிழ்நாடு முழுவதும் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் கூறியிருப்பதாகவும் அதற்காக ₹27 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி கொடுத்திருப்பதாகவும் கூறிய அமைச்சர், மிக விரைவில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மக்களுக்கும் புற்றுநோய் பரிசோதனைகள் செய்யப்பட இருப்பதாகவும் கூறினார்.
இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை தலைமை செயல் அதிகாரி C.V.ராம்குமார், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன், ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மருத்துவ அதிகாரிகள், மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.