Skip to content

தேசிய அளவில் பாலியல் வன்முறைக்கு எதிரான பிரச்சாரம்… அரியலூரில் தொடக்கம்..

  • by Authour

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி இன்று (21.12.2024) கொடியசைத்து தொடங்கி வைத்து பேரணியில் கலந்துகொண்டார்.

சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமையினை எதிர்க்கும் தினமாக நவம்பர் 25ஆம் தேதியை ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததை தொடர்ந்து, இந்தியா முழுவதும் Nayi Chetana 3.0 தேசிய அளவில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்போம் என்ற விழிப்புணர்வு 25 நவம்பர் 2024 முதல் 23 டிசம்பர் 2024 வரை நடைபெறுகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றையதினம் அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட அளவில் தேசிய அளவிலான பாலியல் வன்முறைக்கெதிரான பிரச்சாரத்தினை மாவட்ட

ஆட்சித்தலைவர் இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்து, பேரணியில் கலந்துகொண்டார். இப்பேரணியில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் பாலின வன்முறைக்கு எதிரான வாசகங்களான பொறுக்க மாட்டோம் குரல் எழுப்புவோம், குழந்தை திருமணத்தை ஒழிப்போம், குடும்ப வன்முறையை தடுப்போம், குழந்தை தொழிலாளர் முறையை தடுப்போம், பெண் கல்வியை ஊக்குவிப்போம், பாலின வன்முறைக்கு எதிராக குரலெழுப்புவோம் உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும், முழக்கமிட்டும் சென்றனர். இப்பேரணி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கி அரசினர் தொழிற்பயிற்சி மையம், அரியலூர் நகராட்சி அலுவலகம் வழியாக சென்று அரியலூர் அண்ணாசிலை அருகில் நிறைவடைந்தது.

முன்னதாக பாலின சமத்துவ உறுதிமொழியான ஆண் குழந்தைகளையும், பெண் குழந்தைகளையும் எத்தகைய பாகுபாடுமின்றி சமமாக வளர்ப்போம், வீட்டு வேலைகளை பெண்களும் ஆண்களும் சரி சமமாகப் பகிர்ந்து கொள்வோம், பெண்கள் விருப்பப்பட்ட உயர்கல்வி கற்பதை ஊக்குவிப்போம், அனைத்து துறை பணிகளிலும் பெண்களின் சம பங்கேற்பை உறுதி செய்வோம், பெண்களின் பெயரில் சொத்துக்களைப் பதிவு செய்வதை ஊக்குவிப்போம், அனைத்து செயல்பாடுகளிலும் பெண்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரத்தை உறுதி செய்வோம், அனைத்து இடங்களிலும் பெண்கள் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், துன்புறுத்தப்படுவதையும் மற்றும் பொருளாதார ரீதியாக சுரண்டப்படுவதையும் அனுமதியோம், ஆண் (ம) பெண் குழந்தைகளுக்கு சம வாய்ப்பு அளித்து அச்சமின்றி பயில உறுதுணையாக இருப்போம், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை தடுத்திட பெண் சிசுக்கொலை மட்டும் கருவில் உள்ள குழந்தை ஆனா பெண்ணா என கண்டறிவதை தவிர்த்திடுவோம் உறுதிமொழியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வாசிக்க அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், உதவி திட்ட அலுவலர் மணிகண்டன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி, இதர அரசு அலுவலர்கள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!