தஞ்சாவூர் அருளானந்த நகர் முதலாவது தெருவிலுள்ள தனியார் மருத்துவமனை வளாகத்தில் நேற்று ஒரு கார் வெகு நேரமாக நின்று இருந்தது. காரின் பின் இருக்கையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் கார் கதவு கண்ணாடியை உடைத்து அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவலறிந்த தெற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் அருகே சிந்தாமணி குடியிருப்பைச் சேர்ந்த தியாகராஜன் (52) என்பதும், மஸ்கட் நாட்டில் ஒப்பந்ததாரராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அவர் ஒரு மாத விடுமுறையில் தஞ்சாவூருக்கு வந்துள்ளார். இந்நிலையில் அவர் நாஞ்சிக்கோட்டை சாலையிலுள்ள தனியார் மதுபாரில் மது அருந்திவிட்டு, காரில் வீட்டுக்கு திரும்பும்போது மர்மமான முறையில் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. மேலும், மதுபானக் கூடம், நாஞ்சிக்கோட்டை சாலை, அருளானந்த நகர், மருத்துவமனை வளாகம் ஆகிய பகுதிகளிலுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
மேலும் மது அருந்தியதால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு இறந்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.