ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது…
அரசின் மீது குற்றச்சாட்டு சொல்ல வேண்டும், அவதூறு கிளப்ப வேண்டும் என்பதற்காக பொய் புகார்களை அதிமுக மற்றும் பாஜகவினர் கூறி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், ‘50 ஆயிரம் போலி வாக்காளர் உள்ளதாக’ புகார் தெரிவிக்கிறார். ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர் பட்டியலை திமுக தயாரிக்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் வாக்காளர் பட்டியலை தயாரிக்கிறது. 2021-ல் ஈரோடு கிழக்கில் இருந்த வாக்காளர்கள் எவ்வளவு, தற்போது எவ்வளவு வாக்காளர்கள் உள்ளனர், எப்படி போலி வாக்காளர்கள் வருவார்கள் என்று அவரிடம் பத்திரிகையாளர்கள் கேட்க வேண்டும். முதல்வர் மு.க. ஸ்டாலினின் ஆதரவு பெற்ற வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்று விடுவார் என தெரிந்து, தோல்விக்கான காரணங்களை இப்போதே அதிமுகவினர் பட்டியலிடுகின்றனர். அனைத்து கூடாரங்களும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளின்படி, அனுமதி பெற்று அமைக்கப்பட்டுள்ளது. அதிமுகவினரைச் சந்திக்க வாக்காளர்கள் விரும்பவில்லை. அதனால், எங்களோடு அவர்கள் இருக்கிறார்கள். எங்களை அடைத்து வைத்துள்ளதாக, தேர்தல் ஆணையத்திற்கு வாக்காளர்கள் யாரேனும் புகார் அளித்துள்ளார்களா?
எங்கள் பகுதியில் பிரச்சாரம் செய்த செங்கோட்டையன், ‘கைதட்ட கூட கூட்டம் வரவில்லை. வந்திருக்கிற 10 பேராவது கைதட்டுங்கள்’ என்று கேட்கும் நிலைக்கு வாக்காளர்கள் அதிமுகவை புறக்கணிக்கின்றனர். அதிமுகவினர் விரக்தியில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.