ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர். இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட நேற்று வரை மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். மேலும் பல்வேறு கட்சி நிர்வாகிகளும் வாக்காளர்களை சந்தித்து தங்களுக்கு வாக்களிக்கும்படி தீவிர பிரசாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்கள். இன்று முக்கிய கட்சிகளான காங்கிரஸ், அ.தி.மு.க., அ.ம.மு.க. ஆகிய கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதால், ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு ஆதரவாக தேர்தல் பணி மேற்கொள்ள திமுகவில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட 30 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கரூர் மாவட்ட செயலாளரும் தமிழக மின்துறை மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான செந்தில்பாலாஜிக்கு 17, 18 மற்றும் 25 வார்டுகளுகளை உள்ளடக்கிய 22 வாக்குசாவடிகள் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது. அங்கு தங்கி தேர்தல் பணி மேற்கொண்டு வரும் அவர் காலை மற்றும் மாலை வேளைகளில் நிர்வாகிகளுடன் சேர்ந்து வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியினை மேற்கொண்டு வருகிறார். நேற்றைய தினம் அமைச்சர் செந்தில்பாலாஜி வழக்கமான வேஷ்டி, சட்டைக்க பதிலாக பேண்ட் சட்டை அணிந்து 3 வார்டுகளிலும் வலம் வந்தார். குறிப்பாக 25வது வார்டு தேர்தல் அலுவலகத்தில் நிர்வாகிகளுடன் அமைச்சர் செந்தில் பாலாஜி கேசுவலாக அமர்ந்து தேர்தல் பணியினை மேற்கொண்டார். அங்கு வந்த காங்கிரசாரும் அவ்வழியாக சென்ற பொதுமக்களும் அமைச்சர் செந்தில்பாலாஜியை பலரும் ஆச்சர்யத்துடன் பார்த்து சென்றனர்… அமைச்சர் செந்தில்பாலாஜியை அரசியல் பார்வையாளர்கள் எலெக்ஷன் ஹீரோ என வர்ணித்து வருவது குறிப்பிடதக்கது..