Skip to content
Home » கோவை… டிக்கட் பரிசோதகரை கண்டித்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி….

கோவை… டிக்கட் பரிசோதகரை கண்டித்து பஸ்கள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி….

  • by Senthil

கோவை, பொள்ளாச்சியில் இருந்து காந்தி ஆசிரமம் பகுதிக்கு இயங்கும் 23(A) எண் கொண்ட அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காந்தி ஆசிரமம் பகுதியில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது திருவள்ளுவர் திடல் பகுதியில் உள்ள பஸ் ஸ்டாண்டில் ஏறிய டிக்கட் பரிசோதகர் விஜயகுமார் பயண சீட்டு தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஒரு பெண் பயணியிடம் இலவச பயண சீட்டு இல்லாதது தெரிய வந்தது இதை அடுத்து பேருந்து நடத்துனர் கனகராஜ் என்பவரிடம் இதற்கு நீங்கள் தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றும் உங்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பரிசோதகர் கூறியுள்ளார். இதில்  ஆத்திரமடைந்த நடத்துனர் சக பேருந்து டிரைவர்களிடமும் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து செல்லக் கூடிய 20க்கும் மேற்பட்ட நகர பஸ்கள் நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பஸ் நடத்துனர்கள் கூறுகையில்… தமிழக அரசு மகளிர் இலவசமாக பயணிக்கலாம் என அறிவித்துள்ளது. ஆனால் அதிகாரிகள் அதை மதிப்பதில்லை என்று குற்றம் சாட்டி அனைத்து ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்கள் பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் குவிந்தனர். பின்னர் அங்கு விரைந்த காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் பேருந்து நடத்துணர் மற்றும் ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததால் ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் அனைத்து பேருந்துகளும் இயக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!