Skip to content

பஸ்சில் தொங்கியபடி சென்ற மாணவர்களை தாக்கிய நடிகை கைது…

  • by Authour

சென்னை அருகே கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி மாணவர்கள் சிலர் பயணித்தனர். அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை ஓவர்டேக் செய்து வழிமறித்து நிறுத்தியுள்ளார். பின்னர் மாணவர்களை சரமாரியாகத் திட்டியுள்ளார். படியில் தொங்கியபடி பயணம் செய்ததைக் கண்டித்த அவர், மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது அவர்களைத் தாக்கியும் உள்ளார். மேலும் பேருந்து ஓட்டுநர், நடத்துநரை ஒருமையில் பேசி சண்டை இழுத்துள்ளார். இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் நடிகை ரஞ்சனா மீது அரசுப் பேருந்து ஓட்டுநர் சரவணன் போலீஸில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் அடிப்படையில் இன்று (சனிக்கிழமை) காலை மாங்காடு போலீஸார் ரஞ்சனாவை அவரது வீட்டுக்கே சென்று கைது செய்தனர். மாணவர்களைத் தாக்கியது, அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யவந்த காவல்துறையினருடனும் நடிகை வாக்குவாதம் செய்தார். கைது ஆணை இருக்கிறதா? என்ன காரணத்துக்காக கைது செய்கிறீர்கள்? என்றெல்லாம் வினவினார். அந்தக் காட்சிகளும் இணையத்தில் வெளியாகியுள்ளன. கைது செய்யப்பட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் தமிழக பாஜகவிலும் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!