திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்டிலிருந்து ஸ்ரீரங்கம் நோக்கி ஒரு அரசு டவுன் பஸ் புறப்பட்டது. இதில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். இந்த பஸ் பஸ்ஸ்டாண்டிலிருந்து புறப்பட்டு கலையரங்கம் தாண்டி வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த பஸ்சின் கண்டக்டரின் சீட்டின் நெட்டு போல்டு கழன்று அதில் அமர்ந்திருந்த கண்டக்டர் பஸ்சுக்கு வெளியே தூக்கி வீசப்பட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்து பயணிகள் கூச்சலிட்டனர். உடனே டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்னர் காயத்துடன் இருந்த கண்டக்டரை மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அந்த பஸ்சில் வந்த பயணிகளை பின்னால் வந்த வேறொரு டவுன் பஸ்சில் ஏற்றி அனுப்பி வைத்தனர். அதன் பின்னர் டிரைவர் ரோட்டில் கிடந்த இருக்கையை எடுத்து பஸ்சில் போட்டுவிட்டு பணிமனைக்கு சென்றார்.
அதிர்ஷ்டவசமாக கண்டக்டர் தூக்கி வீசப்பட்ட நேரத்தில் அந்த வழியாக வேறு வாகனங்கள் வரவில்லை. அவ்வாறு வந்திருந்தால் நிலைமை மோசமாகி இருக்கும் என பயணிகள் அச்சம் தெரிவித்தனர். ஓடும் பஸ்சில் இருக்கை கழன்று கண்டக்டர் வெளியே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது
