Skip to content
Home » தஞ்சை பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதல்….. 2 வாலிபர்கள் கைது

தஞ்சை பஸ்சை வழிமறித்து கண்டக்டர் மீது தாக்குதல்….. 2 வாலிபர்கள் கைது

தஞ்சாவூர் அருகே பைக்கில் பின் தொடர்ந்து வந்து தனியார் பஸ்சை மறித்து நிறுத்தி கண்டக்டர் மீது சரமாரியாக தாக்குதல் நடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணத்திலிருந்து தஞ்சாவூருக்கு தனியார் பஸ் ஒன்று  வந்து கொண்டிருந்தது. அம்மா சத்திரம் பகுதியை  சேர்ந்த மோகன் என்பவரின் மகன் சதீஷ்குமார் (28) கண்டக்டராக பணியில் இருந்தார்.

இந்த தனியார் பஸ் அய்யம்பேட்டை நிறுத்தத்தில் நின்று பயணிகளை ஏற்றி கொண்டிருந்தது. அப்போது பாபநாசம் அருகே புரசைக்குடியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரின் மகன் அஜித்குமார் (29) குழந்தையுடன் ஒரு பெண்ணை பஸ்சில் ஏற்றி விட்டார். அப்போது கண்டக்டர் சதீசுக்கும், அஜித் குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரம் நடந்த வாக்குவாதம் முடிந்த பின்னர் பஸ் புறப்பட்டு சென்றது.

இந்நிலையில் அஜித்குமார் சக்கராப்பள்ளியை சேர்ந்த சாகுல் ஹமீது என்பவரின் மகன் குலாம் தஸ்தஹிர் (25) என்பவரை பைக்கில் ஏற்றி கொண்டு பஸ்சை பின் தொடர்ந்து வேகமாக விரட்டி வந்துள்ளார்.

தஞ்சை அருகே வயலூர் பகுதியில் வந்தபோது பஸ்சை வழிமறித்து சதீஷ்குமாரை தகாத வார்த்தையால் திட்டி கையால் சரமாரியாக அடித்து தாக்கினர். இந்த தாக்குதல் சம்பவத்தில் சதீஷ்குமார் பலத்த காயமடைந்து கும்பகோணம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து சதீஷ்குமார் தாலுகா போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அஜித்குமார், குலாம் தஸ்தஹிர் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!