பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். சென்னை பெரம்பூரில் இவரது வீடு உள்ளது. ஆம்ஸ்ட்ராங் இன்று மாலை தனது வீட்டின் அருகே நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது 3 இருசக்கர வாகனங்களில் வந்த 6 பேர் கொண்ட மர்மநபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர். பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங்க், சென்னை கிரீன்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். சம்பவ இடத்திற்கு வந்த ஐஜி அஸ்ரா கார்க் கொலை குறித்து விசாரணை மேற்கொண்டார். அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமிராக்கள் மூலம் கொலையாளிகள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ஆம்ஸ்ட்ராங் படுகொலையை அடுத்து அசம்பாவிதங்களை தடுக்க சென்னை பெரம்பூர், செம்பியம் உள்ளிட்ட பகுதிகளில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வழக்கறிஞரான ஆம்ஸ்ட்ராங், 2000 ம் ஆண்டு முதல் தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2006 ஆம் ஆண்டு, சுயேட்சையாக நின்று சென்னை மாமன்ற உறுப்பினரானார். 2007 ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். சுமார் 15 ஆண்டுகாலமாக ஆம்ஸ்ட்ராங் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவராக இருந்துவருகிறார்.