தஞ்சாவூா் அருகே மாதாகோட்டையில் லூர்து மாதா ஜல்லிக்கட்டு பேரவை சார்பில் ஜல்லிக்கட்டு திருவிழா இன்று நடைபெற்றது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 600க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. இதில் அரியலூர் மாவட்டம் வெங்கனூர் கிராமத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவரது வளர்ப்பு காளை போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றது. இதையடுத்து அந்த காளை போட்டியின் மைதானத்தை விட்டு வெளியே ஓடியது. இந்நிலையில் அந்த காளையை உரிமையாளர் பிடிப்பதற்காக துரத்தி சென்றார். அப்போது மக்கள்
கூட்டத்தைக் கண்டு அந்த காளை மாதகோட்டை பைபாஸ் பாலத்தின் மீது ஏறி ஓடியது. இந்நிலையில் அந்த காளையை பிடிப்பதற்காக செல்லும் போது திடீரென பாலத்தின் மேலே இருந்து கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இறந்த காளையை சுற்றி பொதுமக்கள் சூழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த காளையின் உடலை மாட்டின் உரிமையாளர் அங்கிருந்து அஞ்சலிக்காக தனது கிராமத்திற்கு எடுத்துச் சென்றார்.