மார்பக புற்றுநோயால் இந்தியாவில் 90 ஆயிரம் பேர் இறக்கின்றனர். இதுகுறித்த விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம் பாளையங்கோட்டை கல்லூரி மாணவிகளால் நடத்தப்பட்டது.
ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. பெண்களுக்கு ஏற்படும் புற்று நோய்களில் உலக அளவில் மார்பக புற்றுநோய் முதலிடத்தில் உள்ளது.
இந்தியாவில் ஆண்டுதோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மார்பக புற்று நோய்க்கு ஆளாகின்றனர். இதில் சுமார் 90 ஆயிரம் பேர் இறக்கின்றனர். எனவே இந்த நோயின் முக்கியத்துவம் மற்றும் தடுக்கும் வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
அக்டோபர் மாதத்தில் நடத்தப்படுகிறது.
நெல்லை பாளையங்கோட்டை சேவியர்ஸ் கல்லூரி சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மனித சங்கிலி இயக்கம் நடத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் ஏராளமான மாணவிகள் பிங்க் நிற ஆடையுடன் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி கல்லூரி முன்புற சாலையில் மனித சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.
நிகழ்ச்சி தொடக்க விழாவில் கல்லூரி அதிபர் இன்னாசிமுத்து, செயலாளர் புஷ்பராஜ், கல்லூரி முதல்வர் காட்வின் ரூபஸ், துணை முதல்வர் லூர்துசாமி ஆகியோர் பங்கேற்றனர். இந்திய மருத்துவ சங்க நெல்லை கிளை தலைவர் சுப்பிரமணியன், டாக்டர் விது பாலா, டாக்டர் சாரதா ஆகியோர் மார்பக கேன்சர் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் முத்து, சமிலா ஜோஸ்டர் உள்ளிட்டோர் செய்தனர்.