தஞ்சை மாவட்டம் சீராளுர் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் சில சமூக விரோதிகள் உட்கார்ந்து கொண்டு மது அருந்துவதோடு பேருந்துக்காக காத்து நிற்கும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளை கேலி கிண்டல் செய்து அவதூறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்காணிக்க கிராம மக்கள் ஒன்றிணைந்து பேருந்து நிறுத்தம் அருகில் நான்கு சிசி டிவி கேமராக்கள் பொருத்தினர். இந்த நிலையில் நேற்று மாலை சில சமூக விரோதிகள் சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தியதோடு ஊருக்குள் புகுந்து தகாத வார்த்தைகளால் பேசி தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இதனை கண்டித்து. சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தி கிராம மக்கள் திருக்காட்டுப்பள்ளி தஞ்சாவூர் இடையிலான சாலையில் சீராளுர் பேருந்து நிறுத்தம் அருகில் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் நின்றதால் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதித்தது. கிராம மக்களின் மறியல் போராட்டம் காரணமாக அலுவலகம் செல்பவர்கள் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் சிரமத்திற்கு ஆளாகினர். இதற்கு இடையில் கள்ளப்பெரும்பு போலீசார் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூணு பேரை கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிசிடிவி கேமராக்களை உடைத்த சீராளூர் சக்திவேல் மகன் சத்தியமூர்த்தி (33), பாலையன் மகன் கிருஷ்ணமூர்த்தி (32 ), ராமலிங்க மகன் கௌரிசங்கர் (32 ) ஆகிய மூன்று பேரையும் கள்ளப் பெரம்பூர் போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.