தஞ்சை மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவில் சிறப்பு எஸ்ஐயாக பணியாற்றி வந்தவர் குரு மாணிக்கம் (50). இவரது மனைவி வித்யா. இவர்களுக்கு இரண்டு மகன்கள். இந்நிலையில் கடந்த 3ம் தேதி தனது மகனை கல்லூரிக்கு பஸ்ஸில் ஏற்றிவிட்ட பின்னர் பைக்கில் குரு மாணிக்கம் வீட்டுக்கு திரும்பி கொண்டு இருந்தார். அப்போது யாகப்பா நகர் பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி குரு மாணிக்கம் படுகாயம் அடைந்தார்.
உடன் அவரை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்நிலையில் குரு மாணிக்கம் நேற்று மூளைச் சாவு அடைந்தார். இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் குருமாணிக்கத்தின் குடும்பத்தினர் ஒப்புதலுடன் அவரது உடல் உறுப்புகள் தானமாக பெறப்பட்டது. இதை எடுத்து அவரது கண் தஞ்சை அரசு ராஜா மிராசுதாரர் மருத்துவமனைக்கும், தோல் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கும் அனுப்பிவைக்கப்பட்டது. பின்பு நேற்று இரவு மூளைச்சாவடைந்த சிறப்பு எஸ்ஐ குருமாணிக்கத்திற்கு அரசு மரியாதை செய்யப்பட்டது. இதில் தஞ்சை மருத்துவக் கல்லூரி டீல் பொறுப்பு பாலசுப்ரமணியன், ஆர். எம். ஓ செல்வம், மருத்துவர்கள் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.