திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த (22.03.2023) அன்று சென்னை, அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற தி.மு.க. மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கழகத்தில் ஒரு கோடி புதிய உறுப்பினர்களை சேர்த்தல், முழுமையாக பூத் கமிட்டி அமைத்தல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மேற்கண்ட தீர்மானங்களின்படி, கழகத்தில் மொத்தம் இரண்டு கோடி உறுப்பினர்களை வெற்றிகரமாகச் சேர்த்து, ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டுள்ளது.
“வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் ஒரு நாள் பயிற்சி பாசறைக் கூட்டம்” நடத்திட முடிவெடுக்கப்பட்டு, கடந்த ஜூலை 26 மற்றும் ஆகஸ்ட் 17 அன்று திருச்சி மற்றும் ராமநாதபுரத்தில் முறையே டெல்டா மற்றும் தென் மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சிப் பாசறைக் கூட்டம் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்ததைத் தொடர்ந்து, மேற்கு மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களின் “வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம்” வருகிற 24-9-2023 (ஞாயிற்றுக்கிழமை) அன்று காங்கேயத்தில், படியூர் என்ற இடத்தில் காலை 10 மணி அளவில் நடைபெற உள்ளது.
தமிழ்நாடு முதவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். மேற்கு மண்டலத்துக்கு உட்பட்ட கீழே குறிப்பிட்டுள்ள 14 கழக மாவட்டங்களின், மாவட்டக் கழகச் செயலாளர்கள்,தமது மாவட்டங்களுக்குட்பட்ட ‘வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டத்தை’ கூட்டி, இப்பயிற்சி பாசறைக் கூட்டத்தின் அவசியத்தை எடுத்துரைத்து, தங்களது மாவட்டத்துக்கு உட்பட்ட வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அனைவரையும் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.