நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை சந்திக்க அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளில் இறங்கி உள்ளன. அந்த வகையில் திருச்சி புறநகர் தெற்கு அதிமுக மாவட்ட செயல் வீரர்கள், மாவட்ட நிர்வாகிகள், ஆலோசனைக்கூட்டம் இன்று காலை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்துக்கு புறநகர் தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் , முன்னாள் எம்.பி. குமார் தலைமை தாங்கி, தேர்தல் பணிகளை இப்போதே தொடங்க வேண்டும், பூத் கமிட்டி அமைக்கும் பணிகள், மற்றும் கழக வளர்ச்சி பணிகள் குறித்தும், விளக்கி கூறினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவுக்கிணங்க பணிகளை இப்போதே தொடங்க வேண்டும் என்றும், பூத் கமிட்டி விரைவாக அமைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் பட்டியலை மாவட்ட கழகத்திற்கு அனுப்பும்படியும் கேட்டுக்கொண்டார்.