அரியலூர் மாவட்டம், வாலாஜாநகரம் அன்னலெட்சுமி ராஜபாண்டியன் திருமண மண்டபத்தில், 8-வது அரியலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி துவக்கி வைத்துப் பார்வையிட்டார். அப்போது அவர் பல்வேறு புத்தகங்களையும் தனக்காக வாங்கினார்.
விழாவில் கலெக்டர் ரத்தினசாமி பேசியதாவது:மாணவர்கள் மற்றும் இளைய தலைமுறையினரிடம் வாசிப்பு திறனை ஏற்படுத்த வேண்டும் என்பது தலையாய கடமை. புத்தக வாசிப்பு பழக்கம் தான் எண்ணற்ற பல தலைவர்களை இந்த உலகிற்கும், நாட்டிற்கும் கொடுத்துள்ளது. வாசிப்பு வழக்கம் அறிவு திறனை வளர்க்கவும், அறிவு திறனின் அளவுகோலாகவும் விளங்குகிறது. இத்தகைய புத்தகத் திருவிழாக்களை நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசின் சார்பில் எண்ணற்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் திட்டங்களை பின்பற்றி மற்ற மாநிலங்களில் செயல்படுத்தி வருகிறார்கள்.
வருங்கால தலைமுறையினர் வாழ்க்கை வளமாக இருக்கவும், அவர்களுடைய அறிவு மேம்படுத்தப்படவும் புத்தக வாசிப்பு பழக்கம் என்பது மிக முக்கியமானதாகும். இப்புத்தகத் திருவிழாவின் பல்வேறு துறைகள் சார்ந்து பல புத்தகங்கள் உள்ளன. எண்ணற்ற பல அறிஞர்கள், தலைவர்கள் நூலகத்தில்தான் அதிக நேரத்தினை செலவழித்தார்கள்.
அத்தகைய வாசிப்பு பழக்கத்தினை இளைய தலைமுறையினரிடம் கொண்டு சேர்ப்பதுதான் இப்புத்தகத் திருவிழாக்களின் நோக்கமாகும். பொதுமக்கள், அரசு துறையினர் மற்றும் பிற துறையினர் இப்புத்தகத் திருவிழாவின் வாயிலாக தங்களது அறிவை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். இப்புத்தகத் திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு புத்தகத் திருவிழா அரியலூர் அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. தற்சமயம் பள்ளிகளில் தேர்வுகள் நடைபெறுவதால் இந்த ஆண்டு இப்புத்தகத் திருவிழா இத்திருமண மண்டபத்தில் நடைபெற உரிய ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், நட்சத்திரப் பேச்சாளர்களின் கருத்துரை, பள்ளி கல்லூரி மாணாக்கர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளையும் பொதுமக்கள் எவ்வித சிரமமின்றி கண்டுகளிக்கும் வகையில் குளீருட்டப்பட்ட அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது குடும்பங்களுடன் இப்புத்தகத் திருவிழாவிற்கு வருகை புரிந்து தங்களது குழந்தைகளுக்கு அவர்கள் அறிவுத்திறனை வளர்க்கும் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இப்புத்தகத் திருவிழாவினை சிறப்பான முறையில் பயன்படுத்திக்கொண்டு வாழ்க்கையில் முன்னேற்றம் பெற வேண்டும்
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.ரத்தினசாமி பேசினார்.
பின்னர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, தாட்கோ, மாவட்ட தொழில் மையம், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, தோட்டக்கலைத்துறை, தொழிலாளர் நலத்துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்), மாற்றுத்திறனானிகள் நலத்துறை, பால்வளத்துறை, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் கூட்டுறவுத் துறையின் சார்பில் 399 பயனாளிகளுக்கு ரூ.2,01,78,940 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.
இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆ.ரா.சிவராமன், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குநர் ரவிச்சந்திரன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜன், உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஷீஜா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவானந்தன், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் (ம) பதிப்பாளர் சங்க உறுப்பினர் ஜெயக்குமார், தமிழ்ப்பண்பாட்டுப் பேரவை தலைவர் சீனி.பாலகிருஷ்ணன், அரியலூர் வட்டாட்சியர்முத்துலெட்சுமி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
அரியலூர் மாவட்ட நிர்வாகம், தமிழ்ப்பண்பாட்டுப் பேரமைப்பு மற்றும் பள்ளிக்கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் மற்றும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (BAPASI) இணைந்து இந்த புத்தகத் திருவிழா ஏற்பாடுகளை செய்துள்ளது.