தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு 10 மணி அளவில் அமெரிக்கா புறப்பட்டார். சென்னையில் இருந்து துபாய் சென்று அவர் அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ நகருக்கு இன்று போய் சேர்ந்தார்.
இன்று சான் பிரான்சிஸ்கோவில்நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இந்த மாநாட்டின் போது, தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வரும்படி முதலீட்டாளர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுப்பதுடன், முக்கிய முதலீடுகளுக்கான ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது.
இந்நிலையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால் அதை அதிகாரிகள் கவனிக்கவில்லை. முதல்வர் பயணித்த விமானம் சென்னையில் இருந்து புறப்பட்ட பிறகே வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை காவல்துறை உயர் அதிகாரிகள் பார்த்ததாக கூறப்படுகிறது
வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சலை அதிகாரிகள் பார்த்தபோது முதல்வர் சென்ற விமானம் இந்திய வான் எல்லையை கடந்து துபாய் நோக்கி சென்று கொண்டிருந்தது. இதனால் அதிகாரிகளால் ஒன்றும் செய்யமுடியவில்லை. விமானம் துபாய் சென்றடைய 4 மணி நேரம் ஆனது.விமானம் துபாயில் இறங்கும் வரை 4 மணி நேரமும் அதிகாரிகள் உச்சக்கட்ட பதற்றத்துடன் இருந்தனர். ஆனாலும் விமானம் பாதுகாப்புடன் துபாயில் தரை இறங்கியது. பின்னர் அங்கிருந்து அந்த விமானம் சான்பிரான்சிஸ்கோ புறப்பட்டது.
அதன் பிறகு தான் விமானத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்தது. ஆனாலும் அந்த மின்னஞ்சலை அனுப்பியது யார் என சைபர் க்ரைம் போலீஸ் அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.