மும்பையில் இருந்து நியூயார்க் சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை அடுத்து ஏர் இந்தியா விமானம் டெல்லிக்கு திருப்பிவிடப்பட்டது. டெல்லியில் தரையிறங்கிய விமானத்தில் உள்ள பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஏஐ 119 எனப்படும் ஏர் இந்தியா விமானம் நள்ளிரவு 2 மணியளவில் மும்பையிலிருந்து நியூயார்க்கின் ஜான். எஃப். கென்னடி சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டது. இந்த நிலையில், விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பாதுகாப்புக் காரணங்களுக்காக நடுவானிலிருந்து காலை 4.10 மணியளவில் உடனடியாக டில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.
அங்கு பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய பாதுகாப்புத் தொடர்பான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்த வெடிகுண்டு மிரட்டல் எக்ஸ் தளத்தில் வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். சோதனையில் வெடிகுண்டு அச்சுறுத்தல் பொய்யானது என்று தெரிய வந்துள்ளது. இதுதொடர்பாகப் பேசிய ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் கூறியதாவது; ஏஐ 119 எனப்படும் மும்பையிலிருந்து நியூயார்க் செல்லும் விமானம் பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக, அரசாங்கத்தின் பாதுகாப்பு ஒழுங்குமுறைக் குழுவின் வழிகாட்டுதலின்படி டெல்லி விமான நிலையத்திற்குத் திருப்பி விடப்பட்டது.
அனைத்து பயணிகளும் டில்லி விமான நிலையத்தில் இறங்கி பாதுகாப்பாக உள்ளனர். இந்த எதிர்பாராத இடையூறினால் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்தைக் குறைக்கும் விதமாக விமான நிலைய பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். ஏர் இந்தியா தனது பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதில் உறுதியுடன் உள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த அச்சுறுத்தல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் இதேபோன்று மும்பையிலிருந்து சென்ற ஏர் இந்தியா விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அவசரமாக திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் விமானத்தின் கழிவறையில் விமானத்தில் வெடிகுண்டு இருக்கிறது’ என்று எழுதப்பட்ட காகிதம் கிடந்ததாகத் கூறப்பட்டது. ஆனால், சோதனையில் அது பொய்யான தகவல் என்று தெரிய வந்தது.