சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அந்த தகவலில், ‘உங்கள் பள்ளியில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள். தாமதித்தால் குண்டு வெடித்துவிடும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதுபற்றி காலை 10.30 மணியளவில் பல்வேறுபள்ளிகளில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல்கள் பறந்து வந்தன.
முதலில் 6 பள்ளிகளில் இருந்து வந்த தகவல் அடிப்படையில் போலீசார் வெடிகுண்டு நிபுணர்கள், போலீஸ் மோப்ப நாய்களுடன் குறிப்பிட்ட பள்ளிகளில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். அடுத்தடுத்து 13 பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் வந்தது.
மீதமுள்ள 7 பள்ளிகளுக்கும் போலீசார் சென்று சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இது வெறும் புரளி, மிரட்டல் என்பது தெரியவந்தது. இதற்கிடையே இந்த தகவல் சென்னை முழுவதும் பரவியது. அதிர்ச்சி அடைந்து பெற்றோர்கள் பள்ளிகளுக்கு விரைந்தனர். தங்கள் பிள்ளைகளை பதற்றத்துடன் அழைத்து வெளியேறினார்கள். ஆனால் இன்று அந்த பள்ளிகளில் வழக்கம் போல வகுப்புகள் நடந்து வருகிறது.
சென்னை மாநகர சைபர் க்ரைம் போலீசார் அனைத்து பள்ளிகளுக்கும் வந்த மின்னஞ்சலை ஆய்வு செய்தனர். அனைத்தும் ஒரே இடத்தில் இருந்து அனுப்பபட்டுள்ளது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அந்த மின்னஞ்சல் கம்ப்யூட்டரில் இருந்தோ, லேப்டாப்பில் இருந்தோ அனுப்பப்படவில்லை. செல்போன் மூலம் வெளிநாட்டில் இருந்து அனுப்பபட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். எனவே மின்னஞ்சல் அனுப்பிய நபர் வெளிநாட்டில் இருப்பது ஏறத்தாழ தெரியவந்துள்ளது. அவா் ஏன் இப்படி புரளியை கிளப்பினார். இதற்கான பின்னணி என்ன என்பதை கண்டறிய சென்னை மாநகர போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் இன்டர்போல் உதவியை நாட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர்.