சென்னையில் உள்ள 10க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு நேற்று காலை 10 மணியளவில் மின்னஞ்சல் மூலம் ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அந்த தகவலில், ‘உங்கள் பள்ளியில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. உடனடியாக உரிய நடவடிக்கை எடுங்கள். தாமதித்தால் குண்டு வெடித்துவிடும்’ என்று கூறப்பட்டிருந்தது. இதுபற்றி காலை 10.30 மணியளவில் பல்வேறுபள்ளிகளில் இருந்து போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல்கள் பறந்து வந்தன. உடனடியாக பள்ளிகளில் இருந்து குழந்தைகள் வெளியேற்றப்பட்டு பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த சம்பவம் நேற்று சென்னையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. மாநகர போலீஸ் கமிஷனர் ரத்தோர் மற்றும் கூடுதல் கமிஷனர் ஆகியோரும் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலைய உயர் அதிகாரிகள், சைபர் க்ரைம் போலீசார் அனைவரும் அங்கு வந்து துப்பு துலக்கினர். அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே நபர் தான் மிரட்டல் விடுத்துள்ளார் என்பது கண்டறியப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் மிரட்டல் விடுத்த மின்னஞ்சல் முகவரி ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள மின்னஞ்சல் துறையில் பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த நபரின் முகவரி மற்றும் போன் நம்பரை தரும்படி சென்னை போலீசார் ஸ்விட்சர்லாந்து நிறுவனத்துக்கு தகவல் அனுப்பினர். ஆனால் அந்த நிறுவனம் சம்பந்தப்பட்ட நபரின் முகவரி, போன் எண் தர முடியாது. எங்கள் நிறுவனத்தின் சட்டத்தில் அதற்கு இடமில்லை என்று கூறிவிட்டனர்.
இதற்கிடையே மிரட்டல் ஆசாமியை பிடிக்க இன்டர்போல் உதவியையும் சென்னை போலீசார் நாடி உள்ளனர். எனவே அந்த நபர் உலகின் எந்த பகுதி்யில் இருந்தாலும் கைது செய்ய நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.