திருச்சியில் உள்ள 7 பள்ளிகள் மற்றும் 2 கல்லூரிகளுக்கும் இன்று காலை 7 மணி அளவில் ஈமெயில் ஒன்று வந்தது அதில் தங்களது பள்ளி, கல்லூரியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை முதலில் பார்த்த திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளி நிர்வாகத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் குழு மான்போர்ட் பள்ளியில் சோதனை மேற்கொண்டனர்.
மான்போர்ட் பள்ளி நிர்வாகம் அந்த பள்ளி மாணவ மாணவிகளுக்கு விடுமுறை அறிவித்தது. இதனை அடுத்து திருச்சியில் செயின்ட் ஜோசப் கல்லூரி , ஹோலி கிராஸ் கல்லூரி , மான்போர்ட் பள்ளி , சமத் பள்ளி , ஆர்சி பள்ளி , ஆச்சாரியா பள்ளி , கேம்பியன் பள்ளி , செயின்ட் ஆன்ஸ் பள்ளி , ராஜம் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.
முதலில் போலீசில் புகார் தெரிவித்த மான்ட்போர்ட் பள்ளிக்கு காலை 10 மணி அளவில் தான் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் படையினர் வந்தனர். அதன்பிறகு தான் சில பள்ளிகளுக்கு அடுத்தடுத்து வந்தனர். 9 இடங்களுக்கும் ஒரே நேரத்தில் வெடிகுண்டு தடுப்பு படை செல்லும் அளவுக்கு திருச்சி மாவட்டத்திலோ, வேறு எந்த மாவட்டத்திலோ போதுமான படை வசதி இல்லை. அடுத்தடுத்து வெடிகுண்டு பற்றிய செய்தி வந்ததும் திருச்சி போலீசார் அதிர்ந்து போய்விட்டனர்.
நல்லவேளையாக இது புரளியாக அமைந்து விட்டது. எங்கும் அசம்பாவிதம் நடக்கவில்லை. வெடிகுண்டு மிரட்டல் புரளி என கண்டுபிடித்தனர். இதனை அடுத்து மாணவர்களும் கல்லூரி நிர்வாகத்தினரும் நிம்மதி அடைந்தனர்.
தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளுக்கு வரும் 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறைஎன தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் மத்திய கல்வி வாரியத்தின் பள்ளிகள் அனைத்தும் தங்களுக்கு மாநில அரசின் உத்தரவு பொருந்தாது என்ற ரீதியில் பள்ளிகளை நடத்தி வந்தனர். இதனால் தான் யாரோ வெடிகுண்டு புரளியை கிளப்பி விட்டிருப்பார்கள் என பரவலாக பேசப்படுகிறது.