இந்தியாவின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம். இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில், சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கட்டுப்பாட்டு அறைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்ட மர்மநபர் இன்று மதியம் 2 மணிக்கு குண்டு வெடிக்கும் என மிரட்டல் விடுத்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.
இதையடுத்து, போலீசார் மெட்டல் டிடெக்டர், மோப்ப நாய் உதவியுடன் சென்ட்ரல் ரெயில்நிலையத்தில் தீவிர சோதனை நடத்தினர். ரெயில் நிலையத்திற்கு வந்த பயணிகளின் உடமைகளை போலீசார் தீவிர சோதனை செய்தனர். சோதனை முடிவில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்தது. மிரட்டல் விடுத்த மர்ம நபர் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர், இருப்பு பாதை போலீசார், பூக்கடை காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கடந்த ஏப்.25-ம் தேதி மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த, அதே தொலைபேசி எண்ணில் இருந்து மீண்டும் மிரட்டல் வந்துள்ளதால் மாநில கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை போலீசார் தேடி வருகின்றனர்.