கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள களமச்சேரியில் கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை கூட்டம் இன்று நடந்தது. திடீரென்று இன்று காலை சுமார் 9.40 மணியளவில் பயங்கர சத்தத்துடன் மர்மபொருள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் ஒருவர் பலியான நிலையில் 52 பேர் காயமடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுபற்றி கேரளா போலீசார், தீவிரவாத ஒழிப்பு படையினர் மற்றும் என்ஐ அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கினர். அப்போது ஐஇடி வகையை சேர்ந்த டிபன் பாக்ஸ் குண்டுகள் வெடித்து சிதறியது தெரியவந்தது. இதற்கிடையே தான் டொமினிக் மார்ட்டின் என்பவர் குண்டு வெடிப்புக்கு பொறுப்பேற்று போலீசில் சரணடைந்துள்ளார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கிடையே தான் அந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை டொமினிக் மார்ட்டின் நிகழ்த்தியது ஏன்? என்பது தொடர்பான திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது குண்டு வெடிப்பை நிகழ்த்திய பிறகு டொமினிக் மார்ட்டின் தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில் குண்டு வெடிப்பை நிகழ்த்தியதற்கான காரணத்தையும் அவர் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் டொமினிக் மார்ட்டின் கூறியதாவது: என் பெயர் மார்ட்டின். Jehovah Witnesses group-ல் அமைப்பால் நடத்தப்பட்ட பிரார்த்தனை கூட்டத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இதற்கு நான் முழு பொறுப்பு ஏற்கிறேன். நான் ஏன் இந்த செயலை செய்தேன் என்பதை விளக்கவே பேஸ்புக்கில் இந்த லைவ் வீடியோ பதிவேற்றம் செய்கிறேன். 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த அமைப்பு என்பது தவறானது என உணர்ந்தேன். இதன் போதனைகள் நாட்டுக்கு எதிரானது என்பதை நான் உணர்ந்தேன். இதுபற்றி அவர்களின் கவனத்துக்கு கொண்டு சென்றேன். மேலும் தேசவிரோத செயல்களை கைவிட வேண்டும் என வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் மாறவில்லை. தொடர்ந்து தங்களின் கொள்கைகளை போதித்தனர். இதனை நான் எதிர்க்கிறேன். அதோடு இந்த அமைப்பு என்பது தேவையில்லை என்பதையும் நான் முழுமையாக கூறி கொள்கிறேன். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து நான் காவல் நிலையத்தில் சரணடைவேன். மேற்கொண்டு எந்த விசாரணையும் தேவையில்லை. இந்த நேரத்தில் ஒன்றை கூறி கொள்ள விரும்புகிறேன். குண்டு வெடிப்பை நிகழ்த்த நான் எப்படி திட்டமிட்டேன் என்ற விபரங்களை செய்தி சேனல்கள் மற்றுமு் வலைதளங்களில் ஒளிபரப்பக்கூடாது. ஏனென்றால் இது ஒவ்வொரு சாமானியனுக்கும் ஆபத்தை ஏற்படுத்தலாம்” என்றார்.தொடர்ந்து டொமினிக் மார்ட்டினிடம் போலீசார் மற்றும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்..
Tags:கேரள குண்டுவெடிப்பு