உடலுக்குத் தேவையான துத்தநாகம் சத்தினை ஈடு செய்கிறேன் பேர்வழி என, அதிக எண்ணிக்கையிலான நாணயங்கள் மற்றும் காந்தங்களை விழுங்கிய நபருக்கு, டில்லி டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம் உயிரைக் காப்பாற்றியுள்ளனர்.

டில்லியில் பாடி பில்டராக விரும்பிய 26 வயது இளைஞர் ஒருவர் துத்தநாகம் சத்துக்காக விபரீத நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். கட்டழகு தேகத்துக்காக ஆசைப்பட்ட அந்த இளைஞருக்கு ஏனோ அது கைகூடவில்லை. இதனை அடுத்து எவரோ கூறியதன் அடிப்படையில் துத்தநாகம் சத்துக்குறைவினால் தனது உடல் தேறவில்லை என அந்த இளைஞர் முடிவுக்கு வந்தார். அடுத்த அதிரடியாக, நாணயத்தில் துத்தநாகத்தின் சேர்க்கை இருப்பதாக அறிந்து அவற்றை ஒவ்வொன்றாக விழுங்க ஆரம்பித்திருக்கிறார்.

அங்கே வயிற்றை திறந்து பார்த்த மருத்துவர்களுக்கு தலை சுற்றியது. 39 காசுகள் மற்றும் 37 காந்தங்கள் குடலில் ஆங்காங்கே அடைத்து இருந்தன. தொடர்ந்து 7 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைத்திருந்த பிறகே இளைஞரின் உயிருக்கு உத்திரவாதம் கிடைத்தது. துத்தநாகம் சத்துக்காக நாணயங்களை விழுங்கியதாக இளைஞர் தெரிவித்ததை அவரது வீட்டார் அலட்சியப்படுத்தியதே, இந்தளவுக்கு இட்டுச் சென்றிருக்கிறது. இதில் கூடுதலாக துண்டு காந்தங்களை அவர் விழுங்கியது எவர் கவனத்துக்கும் வரவே இல்லை. பாடி பில்டராகும் ஏக்கத்தில் அந்த வாலிபர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்த டாக்டர்கள், அதற்கான கவுன்சலிங் மற்றும் சிகிச்சைக்கும் பரிந்துரை செய்தனர்.