கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் சிரூரில் கடந்த 16ம் தேதி பெய்த கனமழையின் போது ஏற்பட்ட நிலச்சரிவில் தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த டேங்கர் லாரி ஓட்டுநர்கள் சின்னண்ணன்(56), சரவணன்(34), முருகன் உள்ளிட்ட 3 பேர் சிக்கிக்கொண்டனர்.
இதில் தொடர்ச்சியாக மீட்புப்பணி நடைபெற்று வரும் நிலையில் சின்னண்ணன்(56), முருகன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. சரவணன் என்ற ஓட்டுநரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மண் குவியலில் இருந்து நபர் ஒருவரின் பாதி உடல் மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட உடல் பாகங்கள்லாரி டிரைவர் சரவணனுடையதா என கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சரவணனின் தாயாரின் ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதில்பாதி உடல் சரவணனுடையது என பரிசோதனையில் தெரியவந்தது. அதை அவரது குடும்பத்தினரும் உறுதி செய்தனர்.
இந்த தகவல் அறிந்த சரவணனின் உறவினர்கள் கதறி அழுதனர். அத்துடன், சரவணனின் உடலை பார்ப்பதற்காக அவர்கள் கர்நாடகா புறப்படுச் சென்றனர். சரவணனின் மீதி உடல் மண்ணில் புதைந்துள்ள நிலையில், அதனை கண்டுபிடிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலச்சரிவில் 2 வீடுகள், ஒரு ஓட்டல் மண்ணுக்கு அடியில் சிக்கிய நிலையில், இதுவரை 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களில் 8 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில் மேலும் 4 பேரில் உடல்களை மீட்புக்குழுவினர் தேடி வருகிறார்கள்.