துருக்கியின் காசியான்டெப் நகரில் கடந்த 6-ந் தேதி ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கம் துருக்கியில் பேரழிவை ஏற்படுத்தியதுடன், அதன் அண்டை நாடான சிரியாவையும் நிலைகுலைய செய்தது. சிரியாவில் இந்த நிலநடுக்கத்துக்கு 4 ஆயிரத்துக்கும் அதிகமான உயிர்கள் பறிபோயின. இந்த சூழலில் சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஜாண்டரிஸ் நகரில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கிய கர்ப்பிணி ஒருவர் குழந்தையை பிரசவித்த பின் உயிரை விட்டார். அந்த பச்சிளம் பெண் குழந்தை தொப்புள் கொடியுடன் இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டது. அதனை தொடர்ந்து அருகில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதையடுத்து, அந்த குழந்தை தற்போது நலமாக உள்ளது. இதனிடையே கட்டிட இடிபாடுகளுக்கு நடுவில் பிறந்த குழந்தை மீட்கப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி அந்த குழந்தை உலகம் முழுவதும் கவனம் பெற்றது.
அந்த குழந்தை பராமரித்து வரும் டாக்டர் காலித் அத்தியா குழந்தைக்கு அயா என பெயர் சூட்டியுள்ளார். அயா என்றால் அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள். இந்த நிலையில் குழந்தை அயாவை தத்தெடுக்க உலகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்களின் விருப்பத்தை தெரியப்படுத்தி வருகின்றனர்.
குவைத் நாட்டை சேர்ந்த டி.வி. தொகுப்பாளர் ஒருவர், “சட்ட நடைமுறைகள் என்னை அனுமதித்தால், இந்த குழந்தையைப் பார்த்துக்கொள்ளவும் தத்தெடுக்கவும் நான் தயாராக இருக்கிறேன்” என தெரிவித்துள்ளார். மற்றொரு நபர் “நான் அவளைத் தத்தெடுத்து அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையைக் கொடுக்க விரும்புகிறேன்” என்று கூறினார்.
ஆனால் 5 மாத பெண் குழந்தைக்கு தந்தையான டாக்டர் காலித் அத்தியா, “இப்போது அவளைத் தத்தெடுக்க நான் யாரையும் அனுமதிக்கமாட்டேன். அவளது உறவினர் திரும்பும் வரை, நான் அவளை என் சொந்தப் பெண்ணாகப் பார்த்துக்கொள்வேன்” என்கிறார். டாக்டர் காலித் அத்தியாவின் மனைவி தனது மகளோடு சேர்த்து அயாவுக்கும் தாய்ப்பால் கொடுத்து பரிவுடன் கவனித்து வருகிறார்.